Friday, June 19, 2009

சுகத்தின் வேள்விதனில்
சுமைந்திருந்தேன்
காதல் என்றாய்
நீ -

நீ விளங்க வைத்ததை
விளக்கி சொன்னேன் அவளிடம்
விளங்கி கொண்டதந்த
விலங்கு -

அது அறுத்தளித்த
சுமையின் கேள்விதனில்
சுகம் காண்கிறேனே!
இது என்ன இறைவா?

அருள் என்றாய் நீ!

அருள்
- என்றால்
இருளாகி போகவில்லை
இவன் வாழ்வெனில்
அவளை ஏன் பறித்தாய்?

பதிலில்லை
உன்னிடம்
பதிலில்லை!!!

அ ருளாளனே...
நீயும் விடையறியா
நிலை - அருளல்ல
அப்படியெனில்
இது என்ன?

அடுத்த கேள்விக்கு
வித்திடா வகையில்
உனக்குள்ளே யாசித்து
மோட்சம் என்றாய்....

மோட்சம்
- என்றால்
இன்னும் எதற்கு
என்னிடம்
இருக்கிறது

ஒரு உயிரும்
உடல் சுற்றும் உதிரமும்
வினாவை என் நாவெழுப்ப
விக்கித்துப்போனாயோ?

மூன்றாம்தர சோசியன் போல
முற்பிறவி என்றாய்
முழுக்கதை சொல்லாமல்
சாபம் என்றாய்....

சாபம்
- என்றால்
இன்னும் ஒரு
பாபம் செய்ய - என்
உறவுகளை நீ
தூண்டுவதேனோ?

கற்ற கைமண்ணளவில்
கடவுளையே
கடைந்தெடுக்கிறானே என்று

கடுப்பாகிப்போனாயோ?
நானறியேன்
எடுப்பாக ச் சொன்னாய்!

இது! .... இது,... இது தான்
வாழ்வின் பொருளென்று

வாழ்வின் பொருள்
- என்றால்
'அன்பே சிவம்' என்பதற்கு
அர்த்தமென்னடா???
அறிவு கெட்ட ______ (டேஷே)!

முதலின் முதலான
ஆதி - நீ கேட்டாய்!
டேஷேன்றால்
என்னவென்று??

அசிங்கமாக
பேச கடவும்
கால நேரத்தில் - அதனை

நிறுத்தி தடுத்து
கோடிட்ட இடமாய்
விடுத்திடவும்!

அவர்களே நிரப்பிக்கொள்ளட்டும்
கோடிட்ட இடங்களை
அவரவர்கு உறைக்கும்
வண்ணமென்று

என் அன்பின் சீவனானவள்
சொல்லி சொல்லி
பழகிய பழக்கமிது
என்று நான்

காதலோடு வளைந்தேறிய
புருவச்சுழிப்பின் முன்
பாவமாய் நெளிந்தாய் - நீ....

இறைவா....
இன்று போய்
நாளை வா

இன்றைய நாள் உனக்கு
இனிய நாளாக அமையட்டும்